தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் பிரபாஸ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு அடுத்து தற்போது, மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி ராஜா சாப்’ என்ற ஹாரர் காமெடி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
காமெடியுடன் ஹாரர் அம்சங்கள் கலந்த இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இது வருகிற டிசம்பர் 5ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில், ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.தற்போது இப்படத்தின் டீஸர் வைரலாகி வருகிறது.