பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால் நடித்துள்ள மலையாள திரைப்படமான ‘எல் 2 எம்புரான்’ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் 2002ல் நடைபெற்ற குஜராத் கலவரங்களை மையமாகக் கொண்ட சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் கலவரத்தின்போது முஸ்லிம் மக்களை கொன்றவரின் பெயராக ‘பாபா பஜ்ரங்கி’ எனக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கதாபாத்திரமே முக்கிய வில்லனாக படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளன எனும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் வட இந்திய மாநிலங்களில் இந்தப் படத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. சில காட்சிகளை அகற்ற வேண்டும், வில்லனின் பெயரை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தில் உள்ள 17 சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது, வில்லனின் பெயரை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை படக்குழு மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை நீக்கப்பட்ட பிறகு மீண்டும் சென்சாருக்குக் கொடுக்கப்பட்டு புதிய வெர்ஷன் திரையிடப்படும் என கூறப்படுகிறது.