தமிழ் சினிமா உலகில் கடந்த சில வாரங்களாக, ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் பிரிவு சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயம் ரவி தனது பிரிவைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டபோது, அதற்கு பதிலாக அவரது மனைவி ஆர்த்தியும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதற்குப் பிறகு சமூக வலைதளங்களில் பலரும் இவ்விஷயத்தைப் பற்றி பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ‘பிரதர்’ படத்தின் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயம் ரவி, தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டார். அதில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கின் ‘லாகின்’ விவரங்கள் கூட தன்னிடம் இல்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்த ஜெயம் ரவி, அதன் பின்பு எந்தப் பதிவையும் வெளியிடவில்லை. தற்போது, அவர் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை அணுகி தனது ‘லாகின்’ விவரங்களை மீண்டும் பெற்றுள்ளார். இதற்குப் பிறகு, அவர் நேற்று முதல் தனது அடுத்த படமான ‘பிரதர்’ பற்றிய சில தகவல்களைப் பதிவேற்றி உள்ளார்.