அதிதி ஷங்கர் சினிமாவில் தனது முதல் படியாக ‘விருமன்’ திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். இவர் பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார். அதன் பிறகு சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார். நடிப்புக்கு மட்டுமின்றி, ‘விருமன்’ படத்தில் ‘மதுர வீரன்’, ‘மாவீரன்’ படத்தில் ‘வண்ணாரப்பேட்டை’ பாடல்களையும் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.
சமீபத்தில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ‘நேசிப்பாயா’ படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடித்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் ‘பிரேமிஸ்தவா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு நேற்று தெலுங்கு மாநிலங்களில் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அதிதி ஷங்கர், சினிமாவில் நடிக்க தந்தை ஷங்கர் விதித்த நிபந்தனையை பகிர்ந்தார்.நான் மருத்துவ படிப்பு முடிந்ததும் நடிக்க முயற்சிக்க விரும்பினேன். அப்பாவிடம் இதை கூறியபோது, அவர் நீண்ட நேரம் யோசித்து, ஒரு நிபந்தனையுடன் அனுமதி அளித்தார். அது என்னவென்றால், நான் வெற்றிபெறவில்லை என்றால், மீண்டும் மருத்துவத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதுதான்” என்றார். தற்போது, அதிதி ஷங்கர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்படி, விஜய் கனகமெடலா இயக்கும் ‘பைரவம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதன்மூலம், அவர் தெலுங்கு சினிமாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறார்.