டிரை லைட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சான்ட்ரா டி’சோசா ராணா தயாரித்து, ஷைசன் பி.உசுப் இயக்கியுள்ள படம் ‘தி பேஸ் ஆஃப் தி பேஸ்லெஸ்’. இதில் வின்சி அலாய்சியஸ், சோனாலி மொஹந்தி, ஜீத் மத்தாரு, அஜிஸ் ஜோசப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இப்படம், இதுவரை பல்வேறு உலக நாடுகளில் திரையிடப்பட்டு 120-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. தற்போது இந்த திரைப்படம் வருகிற 21ஆம் தேதி தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் திரையிடப்படுகிறது.
இதுகுறித்து படக்குழுவினர் பேசுகையில், கிறிஸ்தவ துறவியான ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், ஆழ்ந்த ஆன்மிக உணர்வு, தியாகம், அன்பு, மன்னிப்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாடு ஆகிய கருத்துக்களை மையமாகக் கொண்டது. சுமார் 136 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் இந்தி, மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றனர். இப்படம் முதன்முதலில் 2023ஆம் ஆண்டு கேரளாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

