சிம்பொனி இசையை அரங்கேற்றி சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, அவரின் பிறந்தநாளான ஜூன் 2ஆம் தேதி அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் அவர் லண்டனில் உள்ள அப்போலோ அரங்கில் சிம்பொனி இசையை அரங்கேற்றி சிறப்பை பெற்றார். இதற்காக அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதற்கு முந்தைய நாள்களில், முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று இளையராஜாவை வாழ்த்தியிருந்தார். அப்போது அவர், ‛‛இளையராஜாவின் சிம்பொனி இசை சாதனை மற்றும் அவர் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலான திரையிசைப் பயணத்தை கௌரவிக்கும் வகையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும்” என அறிவித்திருந்தார்.இந்த நிலையில், இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2ஆம் தேதி அன்று, அவருக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என இன்று (மார்ச் 27) முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.