தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏஆர் முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2023ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, 2024 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது. சில கட்டப் படப்பிடிப்பு நடந்த பிறகு, ஏஆர் முருகதாஸுக்கு பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.
ஏஆர் முருகதாஸ் ‘சிக்கந்தர்’ படத்தை முடித்ததும் தான் மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை இயக்க தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், படம் தொடர்பான அப்டேட் நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது, சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயரை ‘மதராஸி’ என அறிவித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டில், அர்ஜுன் இயக்கி நடித்த படத்திற்கும் ‘மதராஸி’ என்ற பெயரே இருந்தது. எனவே, அந்த படத்தின் பெயரை இந்த படத்திற்கு பயன்படுத்த அவர் அனுமதி பெற்றிருப்பார்கள் என்று கருதலாம். மேலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் பெயரும் பழைய படத்தின் பெயரே. கடந்த ஆண்டு அவர் நடித்த ‘அமரன்’ படத்தின் பெயரும் முந்தைய படத்தின் பெயரே. ‘எதிர் நீச்சல், காக்கி சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன், பராசக்தி’ ஆகியவற்றின் வரிசையில், ‘மதராஸி’ என்ற பெயரும் தற்போது இணைந்துள்ளது.