தெலுங்குத் திரையுலகத்தில் நேற்று முதல் படப்பிடிப்பு நடத்துவதை தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. 30 சதவீத ஊதிய உயர்வு கோரி இந்த ஸ்டிரைக் ஆரம்பமாகி உள்ளது. இதனால், தெலங்கானா, ஆந்திரா மற்றும் இதர மாநிலங்களிலும் நடைபெற்று வரும் தெலுங்குத் திரைப்படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்த திரைப்பட தொழிலாளர் சங்கத்திலும் உறுப்பினர் அல்லாதவர்களை, தங்களது படங்களின் படப்பிடிப்புக்கு பயன்படுத்திக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்கள். தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் திரைப்படத் தொழில் இல்லை என்றும் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது…
1) தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் தெலுங்கு திரைப்படத் தொழில், ஏற்கனவே பல சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய சமயத்தில், தொழிலாளர் துறை ஆணையரின் வழிகாட்டுதலின் கீழ், சுமூகமான தீர்வுக்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் வேளையில், ஆணையரின் வார்த்தைகளை மீறி, 03-08-2025 மற்றும் 04-08-2025 தேதிகளில் இருந்து 30% ஊதிய உயர்வு மற்றும் தயாரிப்பாளரிடமிருந்து உறுதிப்படுத்தல் கடிதம் பெற்றவர்கள் மட்டுமே, கூட்டமைப்பு மூலம் தொழிற்சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகு பணிக்கு செல்ல வேண்டும் என்று தொழிலாளர் கூட்டமைப்பு முடிவு செய்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இது நேர்மையான பேச்சுவார்த்தைகளின் உணர்வை பாதிக்கிறது.
2) தொழிற்சங்கங்கள் கோரும் ஊதிய உயர்வைத் தாங்க முடியாத அளவில் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் உள்ள சிறு தயாரிப்பாளர்கள், உள்ளனர். இந்த உயர்வு அவர்களால் ஏற்க முடியாது மற்றும் அவர்கள் இதைத் தாங்கும் திறனில் இல்லை. ஒவ்வொரு சிறு தயாரிப்பாளரும் இந்த உயர்வுக்கு எதிராக இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போதைய சூழ்நிலைகளில் இந்த உயர்வை அனைத்து தயாரிப்பாளர்களும் ஒருமனதாக எதிர்க்கின்றனர். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி, குறைந்தபட்ச ஊதியம் செலுத்தும் எந்தவொரு தொழிலாளியையும் பணி அமர்த்துவதற்கு தயாரிப்பாளர்களுக்கு உரிமை உள்ளது என்று தொழிலாளர் துறை ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், இந்திய போட்டி ஆணையம் (CCI) தயாரிப்பாளர்களின் சுயாட்சியை ஆதரிக்கும் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. கூட்டமைப்புகளின் அழுத்தம் மற்றும் போட்டியைத் தடுக்கும் நடைமுறைகளை கண்டித்து, அத்தகைய நிபந்தனைகளை அமல்படுத்துவதைத் தடை செய்துள்ளது.
3) மற்ற மெட்ரோபாலிடன் நகரங்களுடன் ஒப்பிடும்போது வாழ்க்கைச் செலவு, நமது தெலுங்கு மாநிலங்களில் குறைவாக உள்ளது. இருப்பினும், அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அதிக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாநில திரைப்படத் தொழில்களில் வழங்கப்படும் ஊதியங்களை விட, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது.
4) இந்த சூழ்நிலைகளின் பின்னணியில், தெலுங்கு திரைப்பட சேம்பர் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதன்படி, திறமையான தொழிலாளர்கள், நாங்கள் வழங்கக்கூடிய ஊதியத்தில் பணியாற்ற தயாராக இருக்கும் எவரையும், அவர்கள் தொழிற்சங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், படப்பிடிப்புக்கு பயன்படுத்த தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். பல ஆர்வமுள்ள திறமையாளர்கள்/தொழிலாளர்கள் தொழிலில் பணியாற்ற தயாராக இருந்தாலும், தொழிற்சங்கங்களில் உறுப்பினராக சேருவதற்கு லட்சக்கணக்கான ரூபாய்களை கோருவதன் மூலம், அவர்களின் நுழைவுக்கு தொழிற்சங்கங்கள் தடையாக உள்ளன. இது பல திறமையான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. ஒவ்வொரு திட்டத்தின் தேவைகள் மற்றும் தனிநபர்களின் திறன்களின் அடிப்படையில் தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்ற தயாரிப்பாளர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
5) திரைத்துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ள திறமையாளர்கள்/தொழிலாளர்களுடன் பணியாற்றுவதற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். உறுப்பினராக சேருவதற்கு லட்சக்கணக்கான ரூபாய்களை செலுத்த வேண்டிய அவசியமில்லை. திறமையான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே எங்கள் நோக்கம்.
6) தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையில், தொழிலில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றி, ஒரு நேர்மறையான முடிவை நோக்கி வர்த்தக சபை செயல்படுகிறது.
7) தயாரிப்பாளர் இல்லையென்றால் திரைப்படத் தொழில் இல்லை. நமது திரைப்படத் தொழிலின் நீடித்திருப்பதற்கு தயாரிப்பாளரின் நல்வாழ்வு மிக முக்கியமானது என்பதை தொழிற்சங்கங்கள் மீண்டும் ஒருமுறை உணர வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்த் திரைப்படத் துறையிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பான பெப்ஸிக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. ஆனால், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸியுடன் இணக்கமாக உள்ளது.
தெலுங்குத் திரைப்பட தொழிலில் நடைபெறும் ஸ்டிரைக்கை அடுத்து பெப்ஸி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தெலுங்கு திரைப்படங்களுக்கு அனுமதி இல்லாமல் பணிபுரிய வேண்டாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதை தங்கள் சங்கத்தின் தெலுங்கு திரைப்படங்களில் பணிபுரியும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்