லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதே நாளில் போட்டியாக, ஹிந்தி திரைப்படமான ‘வார் 2’வும் வெளியாகிறது. ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கூலி’ வெளியீட்டால் கடுமையான போட்டியை சந்திக்கிறது ‘வார் 2’ திரைப்படம்.

தற்போது ரஜினிகாந்துடன் நேரடி போட்டியில் நிற்கும் ‘வார் 2’ படத்தின் நாயகன் ஹிருத்திக் ரோஷன், தனது சிறு வயதில் ரஜினிகாந்த் நடித்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் தயாரித்த ‘பகவான் தாதா’ படத்தில், ஹிருத்திக் குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்தின் தத்துப் பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ராகேஷ் ரோஷன், ஸ்ரீதேவி, டினா முனிம் ஆகியோரும் நடித்திருந்தனர்.
1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மகனாக நடித்த ஹிருத்திக், 39 ஆண்டுகளுக்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அவருடனேயே போட்டியிடுகிறார். சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்துக்கு ‘வார் 2’ பட நாயகன் ஹிருத்திக் ரோஷன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “உங்கள் பக்கத்தில் நடிகராக எனது முதல் படிகளை எடுத்தேன். நீங்கள் எனது முதல் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தீர்கள். ரஜினிகாந்த் சார், தொடர்ந்து நீங்கள் எனக்கு ஒரு ஊக்கமாகவும் உறுதியான வழிகாட்டியாகவும் உள்ளீர்கள். திரைத்துறையில் 50 ஆண்டுகள் மாயாஜாலத்தை படைத்ததற்கு வாழ்த்துக்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.