தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். அவர் 2002ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு வந்த வர்ஷம் படத்தின் மூலம் பிரபாஸிற்கு பெரிய பெயர் கிடைத்தது.பின்னர், சத்ரபதி, ரிபெல் போன்ற வெற்றிப்படங்களில் நடித்தார். பின்னர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர், பிரபாஸ் தீபிகா படுகோனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும், அதனை அவர் நிராகரித்தார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான ‘பத்மாவத்’ படத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் மற்றும் சாஹித் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்தில் சாஹித் கபூர் நடித்த, ராஜபுத்திர மன்னரான மகாராவல் ரத்தன் சிங்கின் பாத்திரம் முதலில் பிரபாஸிற்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்போது பாகுபலி 2 படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால், இதன் கதாபாத்திரம் தனித்து நிற்கும் வகையில் இல்லை என்பதற்காகவும், பிரபாஸ் அந்த வாய்ப்பைத் தவிர்த்தாராம். இந்நிலையில் சமீபத்தில் வெளியான கல்கி படத்தில் தீபிகா படுகோனே உடன் முக்கிய கதாபாத்திரத்தில் முதல் முறையாக அவருடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.