தெலுங்கு திரையுலகில் அடுத்த பெரிய ரிலீசாக எதிர்பார்க்கப்படும் படம் விஷ்ணு மஞ்சு தயாரித்து, நடித்து வரும் “கண்ணப்பா” திரைப்படம். இது சிவபக்தரான கண்ணப்பனின் புராணக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட படம். இப்படத்தின் இயக்கத்தை முகேஷ் குமார் சிங் மேற்கொண்டுள்ளார். படத்தை பான் இந்திய அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை முழுமையாக பான் இந்திய படமாக உருவாக்கும் நோக்கில், விஷ்ணு மஞ்சு இதில் பல்வேறு மொழிகளிலிருந்து முன்னணி நடிகர்களை இணைத்துள்ளார். இதில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மலையாளத்தின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், தெலுங்கு நடிகர் பிரபாஸ், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில், “ருத்ரா” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அவரது கதாபாத்திர டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில், சமீபத்தில் விஷ்ணு மஞ்சு தனது ரசிகர்களுடன் சமூக ஊடகங்களில் கலந்துரையாடிய போது, நடிகர் பிரபாஸ் இந்த படத்தில் நடிப்பதற்காக எந்த ஒரு சம்பளத்தையும் வாங்கவில்லை என்றும், படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தை கேட்டவுடன் எந்தவித தயக்கமும் இன்றி உடனே ஒப்புக்கொண்டார் என்றும் உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்துள்ளார்.