விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 2023-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்தும் இயக்கியும் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சிறந்த சாதனையை நிகழ்த்தியது.

இந்த வெற்றிகளைத் தொடர்ந்து ‘பிச்சைக்காரன் 3’ உருவாகும் என கூறப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது இல்லை. இதனால், இந்தத் தொடரின் மூன்றாம் பாகம் குறித்த தகவலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘மார்கன்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனியிடம் ‘பிச்சைக்காரன் 3’ பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “‘பிச்சைக்காரன் 3’ கதையை இப்போதே நான் சொல்ல முடியும். இது முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை விட முற்றிலும் வேறுபட்டதாய், வித்தியாசமானதாக இருக்கும். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் ‘பிச்சைக்காரன் 3’ திரையரங்குகளில் வெளியாகும்” என தெரிவித்தார்.