விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் ‘‘கிங்டம்’’ திரைப்படத்துக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு வருத்தம் தெரிவிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற எங்கள் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள ‘கிங்டம்’ திரைப்படத்தில் உள்ள சில காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாகக் கேள்விபட்டோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறோம்.

இந்தக் கதை முழுவதும் கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை இப்படத்தின் மறுப்புப் பகுதியில் (disclaimer) குறிப்பிட்டுள்ளோம் என்பதையும் நாங்கள் உறுதியாக தெரிவிக்கிறோம். இதையும் மீறி, யாருடைய உணர்வுகளும் புண்பட்டிருக்கின், அதற்காக நாங்கள் மிகுந்த வருத்தம் தெரிவிக்கிறோம். ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான இந்த ‘கிங்டம்’ திரைப்படம் கடந்த 31ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் இலங்கை தமிழர்களை எதிர்மறையாகக் காட்டும் காட்சிகள் இருப்பதாக சிலர் குற்றம்சாட்டியதால், எதிர்ப்புகள் கிளம்பியிருந்தன.