இயக்குநர் ஷங்கரின் ஒரு கருத்து தன்னை ஆழமாக பாதித்தது என பிரபல எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள பன்வெல் வளாகத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவின் நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர், மாணவர்களின் கேள்விகளுக்கு நகைச்சுவையுடன் பதிலளித்தார். “நேர்மையாகச் சொன்னால், நான் எடிட்டராக ஆனது ஒரு விபத்துதான் என்று தனது தொடக்க காலத்தை நினைவுகூர்ந்தார் ரூபன்.

அவர் மேலும் கூறியதாவது, நான் ஒருபோதும் மிகப் புத்திசாலி மாணவன் அல்ல. மாறாக சோம்பேறி. தேர்வுகளுக்கு முன் நண்பர்கள் சொல்வதையே முழுவதுமாக நம்பியவன் என்று சிரித்தபடி கூறினார். ஆனால் எனக்கு ஒரு விஷயம் தெளிவாக இருந்தது நான் கவனிக்கும் திறனில் சிறந்தவன். அந்த திறமையே எனக்கு வாழ்க்கையில் பல வாய்ப்புகளை தந்தது. கல்லூரி நாட்களில் இயக்குநராக வேண்டும் என்ற கனவு இருந்தாலும், விதி எனக்காக வேறு பாதையைத் திறந்தது என்றார்.
இரண்டாம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கிய ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் எனக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு கிடைத்தது, என்று அவர் நினைவுகூர்ந்தார். அப்போது பலருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது நான் எடிட்டிங் பற்றிய ஆர்வம் இருப்பதைப் பகிர்ந்தேன். அந்தச் சிறிய உரையாடலே என் வாழ்க்கையை முழுமையாக மாற்றியது. பின்னர் எடிட்டர் ஆண்டனி அவர்களிடம் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது; அவர் என் வாழ்க்கையின் உண்மையான வழிகாட்டியாக மாறினார் என்று கூறினார் ரூபன்.
அத்துடன், இயக்குநர் ஷங்கரின் ஒரு கருத்து தன்னை ஆழமாகப் பாதித்ததாகவும் அவர் தெரிவித்தார். ஷங்கர் சார் ஒருமுறை என்னிடம் ஒரு சிறந்த இயக்குநராக வேண்டுமெனில் முதலில் எடிட்டிங் அறையில் நீண்ட நேரம் செலவிட வேண்டும். ஏனெனில் அங்கேதான் கதையாசிரியரின் சிந்தனை, உணர்ச்சி, கதை சொல்லலின் சாரம் அனைத்தையும் நன்கு புரிந்து கொள்ள முடியும். அந்தச் சொல்லை நான் என் மனதில் ஆழமாக பதித்துக் கொண்டேன் என்றார்.
அதனால், பத்து திரைப்படங்களை எடிட்டிங் செய்து அனுபவம் சேர்த்த பிறகு இயக்குநராக மாறுவேன் என்று எண்ணினேன். ஆனால் சில வெற்றி பெற்ற படங்களுக்குப் பிறகு, எடிட்டிங் மீதான என் காதல் அதைவிட ஆழமானது என்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.

