அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு “இதயம் முரளி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் பேசிய அதர்வா, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதல் கதையில் நடிக்கிறேன். காதலர் தினத்தன்று, மாணவர்கள் முன்னிலையில் படத்தின் தலைப்பை வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நான் அருகிலுள்ள இன்னொரு கல்லூரியில் படித்ததால், மாணவர்களின் மனநிலையை நன்றாக அறிந்திருக்கிறேன். காதல் வலிமையான ஒன்று, அதுபோலவே ஒருதலைக் காதலும் ஒரு பெரிய உணர்வு. எல்லோரும் ஒருதலைக் காதலை கடந்து வந்திருப்பார்கள்.

“இதயம் முரளி எனும் பெயர், என் தந்தையை நினைவுபடுத்தினாலும், அந்த நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கவில்லை. இது கதைக்கு பொருத்தமான தலைப்பாக இருந்தது. இதயம் முரளி என்பது ஒரு தனிப்பட்ட பாத்திரம் அல்ல, ஒவ்வொருவரின் உள்ளிலும் ஒரு இதயம் முரளி இருக்கிறார். அந்த உணர்வின் வெளிப்பாடே இந்த திரைப்படம்.

நான் இடைவெளி விட்டு நடிக்கிறேன் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் தொடர்ந்து நடிக்கிறேன். இனி தொடர்ந்து புதிய பட அறிவிப்புகளை வெளியிடுவேன். காதலர் தினத்தன்று நான் கூற விரும்புவது எல்லோரும் காதலியுங்கள். அது வெற்றி பெறலாம், தோற்கலாம், ஆனால் வாழ்க்கையில் காதல் மிகவும் முக்கியமான ஒன்று.”
இந்த படத்தில் அதர்வாவுடன் பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, நிஹாரிகா, ரக்ஷன், நட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். இசையை தமன் அமைக்க, ஆகாஷ் பாஸ்கர் தயாரித்து இயக்குகிறார். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.