தெலுங்கு திரை உலகின் முன்னணி சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகக் கருதப்படும் நடிகர் சிரஞ்சீவி, இதுவரை 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அவர் நடித்த ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், அதன் பிறகு வெளியான ‘போலோ ஷங்கர்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. தற்போது, அவர் நடித்துவரும் ‘விஸ்வாம்பரா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வஷிஷ்டா என்பவர் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சிரஞ்சீவியின் 157 படம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இந்த புதிய திரைப்படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்குகிறார். மேலும், இந்தப் படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறித்தும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் அடுத்தாண்டு சங்கராந்தி (பொங்கல்) விழாவை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.