‘டக்கு மகாராஜ்’ படத்திற்கு பிறகு நடிகர் பாலகிருஷ்ணா நடித்திருக்கும் புதிய படம் ‘அகண்டா 2’. இந்த திரைப்படம், 2021 ஆம் ஆண்டு வெளியான ‘அகண்டா’ திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும். போயபதி ஸ்ரீனு இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர், பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளான இன்று (ஜூன் 10) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசரில் சிவன் வடிவில் பாலகிருஷ்ணா தோன்றுகிறார். “என் சிவன் அனுமதி இல்லாமல் எமனாலும் என் கண்களை பார்க்க முடியாது. நீ பார்க்கிறாயா? அப்பாவி உயிரை எடுக்கிறாயா?” என்று அவர் பேசும் வேகமான வசனம் மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இமயமலையை பின்னணியாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ள டீசரில், திரிசூலம் கையில் வைத்துக் கொண்டு பரமசிவனின் தோற்றத்தில் அவர் வலம் வருகிறார். ‘அகண்டா 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.