நடிகர் பார்த்திபன் தற்போது அரசியலை மையமாகக் கொண்ட “நான் தான் சி.எம்” என்ற திரைப்படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இதில் அவர் சிங்காரவேலன் என்ற கதாபாத்திரத்தில், முதல்-அமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில், “ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்காரவைத்தல் உங்கள் கடமை. நான் சி.எம் நாற்காலியில் அமர்ந்த பிறகு போடப்போகும் முதல் கையெழுத்து, எனக்குப் பிறகு அந்த நாற்காலியில் யாரும் அமரக்கூடாது என்பதுதான்! போடுங்கம்மா ஓட்டு, படகுச் சின்னத்தைப் பார்த்து! — இப்படிக்கு சிங்காரவேலன், சோத்துக் கட்சி” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இதில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலன் என்ற பெயரைப் பயன்படுத்தியிருப்பதும், படகுச் சின்னம் மற்றும் சோத்துக் கட்சி என்ற குறிப்புகளும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு விளக்கம் அளித்த பார்த்திபன், எந்தவித ஆட்ஷேப நோக்கமுமின்றி, எங்கள் படத்தில் வரும் பெயர்கள் முழுமையாக கற்பனை செய்வித்தவையே. சி.எம் பக்கத்தில் ரைமிங் ஆக ‘சி’ வரவேண்டும் என்பதற்காக சிங்காரவேலன் என வைத்தோம். ஆனால் அது மரியாதைக்குரிய சிங்காரவேலருடன் இணைக்கப்பட்டதால் உடனடியாக அதை மாற்ற மனதார சம்மதிக்கிறேன். படகுச் சின்னத்தையும் வேறு சின்னமாக மாற்றிக் கொள்ளலாம், ஆனால் இந்தப் படம் மீனவ சமுதாயம் குறித்ததாக அல்ல.
‘சோத்துக் கட்சி’ என்ற பெயர், சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் மறைந்த சோ தலைமையில், ஆயிரம் பேருக்கு 10 கிலோ அரிசி கொடுத்து துவங்கப்பட்ட ஒன்று. அதனை யாரும் சொந்தமாகக் கொள்ள முடியாது. இல்லாதவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே அரசியலின் அவசியம், அதைத்தான் என் படங்களும் பேசுகின்றன. இந்தப் படமும் அதே கோணத்தில் இருக்கும். எனவே யாரின் மனதையும் புண்படுத்தும் நோக்கமோ, குறிப்பாக மீனவ நண்பர்களை புண்படுத்தும் எண்ணமோ எங்களுக்கில்லை. எனது படத்துக்கு தேவையற்ற சர்ச்சை அல்லது முற்றுகை போராட்டம் போன்ற விளம்பரங்கள் தேவையில்லை என விளக்கமளித்துள்ளார்.