இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி நாளில் வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இன்று சென்னையில் படத்தின் வெற்றி விழா பிரம்மாண்டமாக நடந்தது, இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகை சாய் பல்லவி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
விழாவில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேசும்போது, “மேஜர் முகுந்த் தன்னை ஒரு இந்தியராக சொல்லிக்கொள்வதில் பெருமையடைவார். அவர் தனது அடையாள சான்றிதழ்களில் கூட எந்த தனிப்பட்ட குறியீடும் சேர்க்கப்படக் கூடாது என விரும்புவார். அதனால் அவர் குடும்பத்தினர் என்னிடம் இப்படத்தில் இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டுமே அவருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். இப்படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.” என கூறினார்.