தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘கூலி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அவர் தற்போது கூலி படம் குறித்து பல பத்திரிகை பேட்டிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார்.

இந்நிலையில், ‘ராக்கி’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன என்ற தகவல்கள் முன்னதாக வெளியாகின.
இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘கைதி 2’ படத்தை ஆரம்பிக்க இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது. அந்த இடைவெளியில், அருண் மாதேஸ்வரன் இயக்கும் ஒரு கேங்ஸ்டர் கதையில் நான் நடிக்கவிருக்கிறேன். இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே உடல் எடையை குறைக்கும் பயிற்சியும், மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்பு கலையின் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்,” என தெரிவித்துள்ளார்.