தமிழ் திரையுலகில் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு அல்லது இரண்டு தமிழ் திரைப்படங்களில் அவர் தொடர்ந்து நடித்துவருகிறார். அதே நேரத்தில் தெலுங்கு திரைப்படங்களிலும் அவருக்கான வாய்ப்புகள் நிலைத்திருக்கின்றன. தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் ‘120 பகதூர்’ என்ற புதிய திரைப்படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கதாநாயகனாக பர்ஹான் அக்தர் நடித்துவருகிறார். இவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள மகிழ்ச்சியை பகிர்ந்ததோடு, ராஷி கண்ணா ஒரு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்துள்ளார்.

“நான் சினிமாவுக்குள் நுழையும் முன் மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது சினிமாவில் நடிப்பதற்கான யோசனை இருந்தபோதே, எனக்கு ஒரு விளம்பரப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த விளம்பரத்தில் நான் முதன்முறையாக நடித்தது நடிகர் பர்ஹான் அக்தருடன் தான்.
இப்போது கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதே என்னுடைய மிகப்பெரிய ஆச்சரியம். பொதுவாகவே வாழ்க்கை என்பது ஒரு வட்டம் போல இருக்கிறது என்பார்கள். அதைப் போலவே, இப்போது மீண்டும் பர்ஹான் அக்தருடன் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.