மறைந்த பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், 2018ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தடாக்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் தனது திரையுலகப் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு, ‘ரூஹி’, ‘குட் லக் ஜெர்ரி’, ‘மிலி’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் தன்னுடைய தனித்துவமான இடத்தை பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு வெளியான ‘தேவரா’ என்ற தெலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவிலும் தனது நடிப்பை அறிமுகப்படுத்தினார். அடுத்து, ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்துவருகிறார்.
இதைத் தொடர்ந்து, பா. ரஞ்சித் தயாரிக்கும் ஒரு வெப் தொடர் மூலம் ஜான்வி கபூர் தமிழ் திரைத்துறையில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ஒன்றை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “எல்லோருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். எப்போதும் போல் இந்த வருடமும் எல்லோரும் சந்தோஷமாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டிக் கொள்கிறேன். நம்பிக்கையோடு புது வருடத்தை ஆரம்பிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.