நடிகர் தனுஷ் இயக்கியுள்ள ‘பவர் பாண்டி’ மற்றும் ‘ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தன. அந்தத் தொடரில் சமீபத்தில் அவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து, தனுஷின் இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக ‘இட்லி கடை’ எனும் படம் உருவாகியுள்ளது.

இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றுகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படம் எந்த விதமான கதைக்களத்துடன் வரப்போகிறது என்பதற்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இப்படம் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது இப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாவதிலிருந்து தள்ளி போவதாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதைப் பற்றி அவர் மேலும் கூறும்போது, இன்னும் 10 சதவீதம் வரை படப்பிடிப்பு பாக்கி உள்ளது எனவும், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் ஆகியோர் ஒரே காட்சியில் நடிக்க வேண்டியிருப்பதால் அவர்களின் கால அட்டவணையை ஒருங்கிணைப்பது கடினமாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார். படம் நன்றாக உருவாகி வரும் நிலையில், அவசரமாக முடிக்காமல், தரமாக முடிக்க விரும்புகிறோம். அதனால் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.