தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விஷால், ‘சண்டக்கோழி’, ‘தாமிரபரணி’ போன்ற படங்கள் மூலம் அடிக்கடி வெற்றி படங்களை வழங்கி முன்னணி நடிகராக மாறினார். அவர் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் செயல் புரிந்து வருகிறார்.
இவரது நடிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கிய ‘மதகஜராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. இதில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்த இப்படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருந்தது. சமீபத்தில், இந்த படம் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. விஷால், சந்தானம், மனோபாலா ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. விமர்சன ரீதியிலும் படம் நல்ல மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி, ‘மதகஜராஜா’ படத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில்,”மதகஜராஜா வெற்றிக்கு வாழ்த்துகள், மச்சி! இப்படம் சிரிப்பு சரவெடியாக இருப்பதாகக் கேட்டேன் மிகவும் மகிழ்ச்சி. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார்.