சிபிசிஐடி-யில் உயர் அதிகாரியாக பணியாற்றுபவர் சரத்குமார். ஒரு குற்றவாளியை பிடிக்க முயற்சிக்கும் போது விபத்தில் சிக்கி, சில வருடங்கள் ஓய்வில் இருக்கிறார். அதனால், அவருக்கு ஞாபக மறதி நோயான அல்சைமர் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த “ஸ்மைல் மேன்” சீரியல் கொலைகளைப் போலவே, தற்போது மீண்டும் கொலைகள் நடக்க ஆரம்பிக்கின்றன. இந்த வழக்கை விசாரிக்க புதிதாக வந்த அதிகாரியான ஸ்ரீகுமார் பொறுப்பேற்று செயல்படுகிறார். சரத்குமாரை மீண்டும் பணிக்கு அழைத்து, அவரது தலைமையில் குழு ஒன்றை அமைக்கின்றனர். இந்த குழு கொலைகளுக்குப் பின்னாலுள்ள அந்த கொலையாளியை கண்டுபிடிக்கிறதா, இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
இது சரத்குமாரின் 150வது படம் ஆகும். அவர் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் ஆழமானது. ஞாபக மறதி பாதிப்பால் அவதிப்பட்டு, தனது அருகினாரின் கொலைகளைத் தடுக்க முடியாத மன வேதனையில் சிக்கியுள்ள ஒரு அதிகாரியாக அவர் நடிக்கிறார். அனுபவம் மிகுந்த அவரது நடிப்பு, இந்த கதாபாத்திரத்தில் முழுமையாக உயிர் சேர்க்கிறது.

வழக்கை விசாரிக்கும் புதிய அதிகாரியாக ஸ்ரீகுமார் மற்றும் அவரது உதவியாளர்களாக சிஜா ரோஸ், ராஜ்குமார் நடிக்கிறார்கள். காக்கிச்சட்டை அணியாத சிபிசிஐடி அதிகாரிகளாக அவர்கள் தோன்றுகிறார்கள். ராஜ்குமார் சில காட்சிகளில் காமெடி உருவாக்குவதற்காக கிறுக்குத்தனமாக நடிக்கிறார். சரத்குமாருக்கு உதவியாளராக ஜார்ஜ் மரியான் சிறப்பாக நடித்துள்ளார். பிளாஷ்பேக் காட்சிகளில் இனியா மற்றும் பேபி ஆலியா சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகுந்த உணர்ச்சி மிகுந்தவை.

கதை கோயம்புத்தூரில் நடக்கிறது. இரவு நேர சாலை காட்சிகளை ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன் அழகாகப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, லைட்டிங் மூலம் காட்சிகளைச் சிறப்பாக்கியுள்ளார். பின்னணி இசையில் கவாஸ்கர் அவினாஷ் பரபரப்பை ஏற்படுத்துகிறார்.
க்ரைம் திரில்லர் படங்களில் விறுவிறுப்பான திரைக்கதை மிக முக்கியமானது. இப்படத்தில் அதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், இடைவேளை வரையிலும் கதை மெதுவாக நகர்கிறது. இடைவேளைக்கு பின்பு வரும் பிளாஷ்பேக் காட்சிகள் நெகிழ்ச்சியூட்டும் விதத்தில் அமைந்துள்ளன. சீரியல் கில்லர் யார் என்று தெரிய வரும் போது எதிர்பாராத திருப்பத்தை உருவாக்கியுள்ளனர். இன்னும் கொஞ்சம் முயற்சித்திருந்தால், இது ஒரு பரபரப்பான திரில்லர் படமாக அமைந்திருக்கும்.