சமீபத்தில் ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ என்ற ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் நடிகை பூஜா ஹெக்டே, தாம் பெற்ற எதிர்மறை விமர்சனங்கள் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, பணம் கொடுத்து வளர்ந்து வரும் நபர்களைக் குறிவைத்து, அவமதிக்க முயல்வது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது என் பெற்றோரையும் பெரிதும் பாதிக்கிறது. ஆரம்பத்தில் இதைப் பற்றி நான் அதிகமாக கவலைப்படவில்லை. யாராவது நம்மை கீழே இழுக்க முயன்றால், அதற்குப் பொருள் நாம் அவர்களை விட மேலே இருப்பதாகத்தான் கருதினேன்.

அதனால், முதலில் இதை ஒரு பாராட்டாக எடுத்துக்கொண்டேன். ஆனால், எல்லை மீறிய அர்த்தமற்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. இதற்கு பணம் செலவழிக்கப்படுகின்றது என்பதை என் குழுவின் மூலம் தெரிந்துகொண்டேன். மேலும், இந்தச் செயலில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை அறிந்தேன். சில மீம் பக்கங்கள், ‘பணம் கொடுத்தால் எதிர்மறை பதிவுகளை நீக்கி விடுவோம்’ என கூறியது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதன் மூலம், திரைப்படத் துறையின் மறைந்திருக்கும் இருண்ட யுக்திகள் பற்றி எனக்குத் தெரிந்தது. ஆனால், இந்த எதிர்மறை விமர்சனங்கள் அனைத்தும், ரசிகர்கள் நேரில் காட்டும் தூய்மையான அன்பின் முன்னால் கரைந்து மறைந்து விடுகின்றன. அந்த அன்பே உண்மையான சான்று. இணையத்தில் காணப்படும் விஷத்தன்மையுள்ள கருத்துகள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் சிலர் உருவாக்கும் போலிக் கணக்குகள் மூலமே வந்துகொள்கின்றன” என பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.