மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்வேதா மேனன், தமிழிலும் சில படங்களில் நடித்தவர். சமீபத்தில் மலையாள நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அந்த சங்கத்தின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றும், பெண் குழந்தைகளை சுதந்திரமாக வளர்க்க வேண்டும் என்றும் ஒரு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர் கூறியதாவது, என் தந்தை மிகவும் கண்டிப்பானவர், ஆனால் அதே நேரத்தில் மிகுந்த அன்பும் கொண்டவர். நான் பேசுவது, செய்வது—எதிலும் அவரை மீறிச் செல்ல முடியாது. அவர் எனக்குச் செய்தது எல்லாமே நன்மை. ஆனால் நான் தனியாக முடிவெடுத்து செயல்பட பல வருடங்கள் ஆனது. இன்று அவர் இல்லாதது எனக்கு மிகுந்த இழப்பு.
ஆனால், என் குழந்தை என்னையும், என் கணவரையும் நம்பி வளர்வதை நான் வேண்டாம். என் வாழ்க்கையில் முதலில் பெற்றோர்கள், அடுத்து கணவர், அதன் பின் தான் என் மகள். அவளுக்காக வீடு, சொத்து எதையும் நான் சேர்க்கவில்லை, சேர்க்கவும் மாட்டேன். பிள்ளைகளுக்காக பெற்றோர் சொத்து சேர்ப்பது என்பது முட்டாள்தனம். அவர்களுக்கு நல்ல கல்வி, ஆரோக்கியம், பயண அனுபவம் கொடுக்கவேண்டும் இதுதான் முக்கியம். அவர்கள் எங்களை சார்ந்து நிற்காமல், சுயமாக நிற்கக் கற்றுக் கொடுப்பதே நல்ல பெற்றோரின் பண்பு. நான் அதைத்தான் செய்கிறேன்.
ஒருமுறை என் மகள் ‘இது இருக்கும் அபார்ட்மென்ட் என்னுடையதுதானே?’ என்று கேட்டாள். நான் உடன ‘எப்போதும் அப்படி நினைக்காதே. என் வாழ்க்கையை நான் வாழ்வேன். என்னிடமிருந்து உனக்கு ஒரு பைசா கூட கிடைக்காது. உன் வாழ்க்கையை நீயே உருவாக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டேன். ஸ்வேதா மேனன் கூறிய இந்த கருத்துக்களுக்கு பெரும்பாலான ரசிகர்களும் சமூக வலைதள பயனாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

