தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கு சினிமாவில் “சங்கராந்திகி வஸ்துன்னம்” படத்தின் மூலம் ரசிகர்களிடயே மிகுந்த வரவேற்பைப் பெற்றார். இந்த திரைப்படத்தில் நடிகர் வெங்கடேஷின் மனைவியாக நடித்திருந்தார்.அனில் ரவிபுடி இயக்கிய இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிடப்பட்டு, பிளாக்பஸ்டர் வெற்றியை கண்டது.

இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரியும் நடித்திருந்தார். “சங்கராந்திகி வஸ்துன்னம்” திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் வலுவான இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற டானா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, “சங்கராந்திகி வஸ்துன்னம்” படத்தில் தான் நடித்த கதாபாத்திரம் குறித்து அவர் உரையாற்றினார். அவர் கூறியதாவது: “அந்தப் படத்தில் நான் நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன். இயக்குநர் அனில் ரவிபுடி என்னிடம் ‘சங்கராந்திகி வஸ்துன்னம் 2’ எடுக்கவேண்டுமானால், இந்த முறை ஆறு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டியதாக இருக்கும் ’ என சிரித்துக் கொண்டே கூறினார்.
குழந்தைகளுக்கு அம்மா வேடங்களில் நடிப்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. ஒரு திறமையான நடிகையாக இருக்க வேண்டுமெனில், எந்தவிதமான வேடத்திலும் நடிக்க வேண்டும். அந்த வகையில், ஒரு கதாபாத்திரத்திற்கேற்ப நடிப்பதற்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாது. நான் ஏற்கனவே பல படங்களில் தாயாக நடித்துள்ளேன்” என்றார்.