ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சிங்கிள் பசங்க’ என்ற புதிய நிகழ்ச்சி ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்க, நடுவர் குழுவில் நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகைகள் ஆலியா மானசா மற்றும் ஷ்ருதிகா ஆகியோர் பங்கேற்கின்றனர். இன்ஸ்டாகிராமில் பிரபலமான பல இளைஞர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சி தொடர்பாக நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது, “இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பெண், ஆணை எப்படி விரும்புகிறார், ஒரு ஆண், பெண்ணை எப்படி விரும்புகிறார் என்பது மிகவும் குழப்பமானதாக இருக்கிறது. (சிரித்துப் பேசும்போது) ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணை ஈர்க்கிறான் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் கரு. எனக்கோ, யாரையும் ஈர்க்கத் தெரியாது. அதை கற்றுக்கொள்ளவே இங்கு வந்துள்ளேன்” என்றார்.
அதையடுத்து, செய்தியாளர்களில் ஒருவர், “சினிமாவில் மார்க்கெட் குறைந்ததால் நடிகர்கள் இப்படி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள் என்று பேச்சு இருக்கிறது, அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த நடிகர் பார்த்திபன் கூறுகையில், “நான் தற்போது மூன்று தெலுங்கு படங்களில், ஒரு மலையாளப் படத்தில், ஒரு கன்னடப் படத்தில் மற்றும் ஒரு தமிழ்ப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் ‘மார்க்கெட் இல்லை’ என்று கூற முடியாது. கடந்த வருடம் எனது இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளியானது. எனக்கு எப்போதுமே இயக்கத்துக்கே அதிக ஆர்வம். என் அடுத்த படத்தை இயக்கும் திட்டத்திலும் உள்ளேன். இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை முயற்சி செய்து பார்ப்போம் என்று வந்தேன். இப்படியான கேள்விகள் வரும் என்று எனக்குத் தெரியும்” என தெளிவாக பதிலளித்தார்.