நடிகை எம்.என்.ராஜம் அவர்கள் தனது 90வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அவருடைய விருப்பத்திற்கேற்ப, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அதற்கு ஒத்துழைத்து, அடுத்த நாளே சென்னையில் உள்ள எம்.என்.ராஜத்தின் இல்லத்துக்கு நேரில் சென்றார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது முதல்வர் என்ன பேசினார் என்பதைப்பற்றி எம்.என்.ராஜம் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ‘‘நான் திமுக தலைவர் கருணாநிதி எழுதிய வசனங்களில் நடித்துள்ள ஒரு நடிகை. எனக்கு குழந்தை பருவத்திலிருந்தே ஸ்டாலின் அவர்களை தெரியும். ஆனால் அவர் முதல்வர் ஆன பிறகு அவரை நேரில் பார்க்க வாய்ப்பு இல்லை என்று சொல்லியிருந்தேன். அதைக் கேட்டவுடன் அவர் உடனே வந்துவிட்டார். அவர் என்னிடம் பல விஷயங்களைப் பேசினார், என் உடல்நிலையை நன்றாக விசாரித்தார். ஆனால் நானோ அதிகமாக எதுவும் பேசவில்லை. அவருடைய முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டே இருந்தேன்.
‘நான் பார்த்திட்டேன் அய்யா, ஆகட்டும் அய்யா, நல்லது அய்யா’ என்று கூறிக்கொண்டே இருந்தேன். அவரிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அதேபோல், அவர் தர வேண்டிய உதவிகள் உள்ளதா என்று என்னையும் எதுவும் கேட்கவில்லை. இந்த சந்திப்பை நான் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த நாட்டின் மக்கள் அவரை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள். அவர் என்னை நேரில் வந்து பார்த்தது எனக்குப் பெரும் பெருமை. இது என் வாழ்க்கையில் கடவுளின் அருளாகவே எண்ணுகிறேன். இதைவிட வேறு பெருமை எனக்கு தேவை இல்லை’’ என கூறினார்.