சமீபத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த “எம்புரான்” திரைப்படம் வெளியாகியது. இந்த படம் 2019ம் ஆண்டு வெளியான பிரித்விராஜ் இயக்கிய “லூசிபர்” படத்தின் இரண்டாம் பாகமாக வந்தது. முதல் பாகம் பெரிதாக பரபரப்பில்லாமலேயே பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இரண்டாம் பாகமான “எம்புரான்” சில காட்சிகளில் இந்து மத உணர்வுகளை பாதித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து சில காட்சிகள் திரைப்படத்திலிருந்து அகற்றப்பட்டன.

அதைத் தவிர, தற்போது மத்திய பாஜக அரசில் அமைச்சராக பதவி வகிக்கும் நடிகர் சுரேஷ் கோபியின் பெயர் படத்தின் டைட்டில் நன்றி பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, சுரேஷ் கோபி கேட்டதன் பேரில் அவரது பெயர் அந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், ராஜ்யசபா விவாதத்தின் போது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்பி பிரிட்டோ, “எம்புரான் படத்தில் சில காட்சிகள் மத்திய அரசின் அழுத்தத்தினால் தான் நீக்கப்பட்டன” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த சுரேஷ் கோபி, “எம்புரான் படத்துக்கு எந்த அரசியல் அழுத்தமும் இருந்ததில்லை. அவர்களே தேவையற்ற காட்சிகள் என கருதி சில காட்சிகளை நீக்கியுள்ளனர். என் பெயரையும் நானே கேட்டுக் கொண்டபிறகுதான் நீக்கியார்கள். இப்போது இது குறித்து குற்றம்சாட்டும் கம்யூனிஸ்ட் கட்சி, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் “லெப்ட் ரைட் லெப்ட்” என்ற மலையாள படத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களை தவறாக சித்தரித்ததாக கூறி அந்த படத்தை வெளியிட தடையாக செயல்பட்டது என்பதை மறந்து விட்டீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், கம்யூனிஸ்ட் தலைவர்களை விமர்சித்து கதையை எழுதிய “லெப்ட் ரைட் லெப்ட்” படத்திற்கும், “எம்புரான்” படத்திற்கும் ஒரே கதாசிரியராக முரளி கோபி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.