அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் கயாடு லோஹர். மாடலிங் போட்டிகளில் கலந்துகொண்டு, பின்னர் திரைப்படத்துறையில் பிரவேசித்தவர். கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ள அவர், அடுத்த வாரம் வெளியாக உள்ள ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அந்த படத்திற்குப் பிறகு, ‘இதயம் முரளி’ என்ற மற்றொரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை, ‘இதயம் முரளி’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு, தனது முதல் மேடை உரையை நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒரு மணி நேரத்திற்குள், தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ‘டிராகன்’ படத்தின் அறிவிப்பு விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.

ஏற்கெனவே ‘இதயம் முரளி’ நிகழ்ச்சியில் மேடையேறி, தனது முதல் உரையை நிகழ்த்திய கயாடு, அதே நாளில் ‘டிராகன்’ நிகழ்ச்சியில் பேசியபோது, “இதுதான் எனது முதல் மேடை அனுபவம். அதனால் மிகவும் பதட்டமாக இருக்கிறேன்” என்று கூறினார். இதைக் கண்ட ரசிகர்கள், “இவர் சினிமாவில் பிழைத்து கொள்வார். என சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.