மே 1ம் தேதி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது. தமிழில் ‘ரெட்ரோ’, தெலுங்கில் ‘ஹிட் 3’, ஹிந்தியில் ‘ரெய்டு 2’ ஆகிய இந்த படங்களின் தலைப்புகளில் ஆங்கில சொற்கள் இருந்தது ஒரு ஒற்றுமையாக இருந்தது. எனினும், முதல் நாள் வசூலில் இந்த ஒற்றுமை தொடருமா என்பதைத் தெரியவரும் நாட்களில் தான் அறிய முடியும்.
இந்த படங்களில் நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள ‘ஹிட் 3’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும், அனைத்து மொழிகளிலும் இணைந்து, இப்படம் 43 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 1ம் தேதியன்று வெளியான இந்திய படங்களில் இதுவே மிக அதிக வசூலாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதன் மூலம், ‘ரெட்ரோ’ மற்றும் ‘ரெய்டு 2’ ஆகிய படங்கள் இதைவிட குறைவாகவே வசூலித்துள்ளன என்பது தெளிவாகிறது.
முன்பு நானி நடித்த ‘தசரா’ திரைப்படம் முதல் நாளில் 38 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த சாதனையை தற்போது ‘ஹிட் 3’ முறியடித்துள்ளது. தற்போது இப்படம், வார இறுதிக்குள் 100 கோடியை எட்டும் எனும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.