தக் லைப் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘வடசென்னை’ படத்தின் கதையுடன் தொடர்புடைய தொடர்ச்சித் திரைப்படமாக ‘அரசன்’ உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி தொடங்கவுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கான செட் அமைப்புப் பணிகள் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், ‘வடசென்னை’ படத்தில் செந்திலாக நடித்த நடிகர் கிஷோர் பேசுகையில், அரசன் படத்தில் மீண்டும் செந்திலாக திரையிலே தோன்ற விரும்புகிறேன். இயக்குநர் வெற்றிமாறனின் அழைப்புக்காக காத்திருக்கிறேன். ‘வடசென்னை’ திரைப்படத்தை முதன்முதலில் பார்த்தபோது, சிறிது வருத்தமடைந்தேன்; நான் நடித்தபோது வியந்த சில முக்கிய காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. அந்த நீக்கப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் வெளியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

