விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை இயக்கியவர் கவுதம் வாசுதேவ மேனன். கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

‘துருவ நட்சத்திரம்’ 2017-ம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கிய படம். ஆனால் நிதி தொடர்பான பிரச்னைகள் மற்றும் பல சிக்கல்கள் காரணமாக இது தொடர்ந்து தள்ளிப்போனது. 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் படம் வெளியிடப்படும் என கூறப்பட்ட நிலையில், வெளியீட்டுக்கு முந்தைய தினம் இயக்குநர் கவுதம் மேனன் வெளியீடு தள்ளிப்போவதாக அறிவித்தார். அதன்பிறகு படம் குறித்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் இயக்குநர் கவுதம் மேனன், “துருவ நட்சத்திரம் வெளியான பிறகே தான் நான் மற்ற வேலைகளை தொடங்க இருக்கிறேன். நான் தற்போது எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இப்படத்தை முதலீட்டாளர்களிடம் காட்டியபோது, அவர்கள் திருப்தி அடைந்தனர். தற்போது படம் தொடர்பான சட்ட சிக்கல்களைத் தீர்த்து வருகிறோம். இந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படம் வெளியிடப்படும்,” என கூறினார்.