‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்குவதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. காடுகளை மையப்படுத்தியும், காசியின் வரலாற்றை உள்ளடக்கிய கதையாகயும் உருவாகும் இப்படம் மகேஷ்பாபுவுக்கு 29வது படம். இதற்கிடையே இப்படத்தில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரித்விராஜ் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டரும் வெளியிட்டனர்.

வரும் நவம்பர் 15ல் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட விழா நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த விழாவை ஓடிடி தளத்தில் மாலை 6 மணி முதல் நேரலையாக ஒளிப்பரப்ப உள்ளனர். படத்தின் போஸ்டரை மிகவும் உயரமுள்ள எல்இடி திரையில் வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில், எம்.எம். கீரவாணி இசையில் ‘குளோப் ட்ரோட்டர்’ என்ற பெயரில் படக்குழு ஒரு பாடலை வெளியிட்டுள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ள இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

