நடிகர் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று (ஜனவரி 28) ஸ்ருதிஹாசன் தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதனால், ஸ்ருதிஹாசன் அங்கு படக்குழுவினருடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். மேலும், தனது நண்பர்களுக்காக ஒரு சிறப்பு பார்ட்டியும் ஏற்பாடு செய்துள்ளார். அந்தக் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாள் அனுபவத்தை பகிர்ந்து, “2025ம் ஆண்டு மாயாஜாலம் நிறைந்த வருடமாக இருக்கும். ஜனவரி மாதக் குழந்தையாக, இந்த ஆண்டை மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் தொடங்குகிறேன். வாழ்க்கையில் இதுபோன்ற தருணங்களை நான் ஒரு போதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னை அன்புடனும் நல்வாழ்த்துக்களுடனும் சூழ்ந்துள்ள அனைத்து அழகான மக்களுக்கு மனமார்ந்த நன்றி கூறுகிறேன்.
இந்த ஆண்டு ‘கூலி’ படத்தின் அற்புதமான படக்குழுவுடன் கொண்டாடுவது எனக்கு கூடுதல் சிறப்பாக இருக்கிறது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தி, பல அருமையான மனிதர்களுடன் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதில் நெகிழ்ச்சி அடைந்தேன். வாழ்க்கையின் எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் என்னுடன் பயணிக்கும் என் நம்பிக்கையான குழுவினருக்கும், வேலை நாட்களில் எனக்குத் துணையாக இருக்கும் என் மகத்தான டீமிற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.