கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில், வரலாற்று கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் தான் ‘காந்தாரா’. இந்த படம் 1990-களில் நடைபெறும் குல தெய்வம், நில உரிமை மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகளைச் பற்றி . கன்னட மொழியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த பலமொழி வெளியீடுகளின் மூலம், இப்படம் மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்ததுடன், திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்தப் படத்தை இயக்கியதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இவ்விருதுக்குப் பிறகு, ‘காந்தாரா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக ‘காந்தாரா சேப்டர் – 1’ என்ற இரண்டாம் பாகத் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘காந்தாரா சேப்டர் – 1’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகியான ருக்மிணி வசந்தின் கேரக்டரை படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். மேலும், அவரது கதாபாத்திர போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ருக்மிணி வசந்த், கனகாவதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த புதிய போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுவருகிறது.