71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. விருதுகளை ஜனாதிபதி திராவுபதி முர்மு வழங்கினார். திரைப்படத் துறையின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் சிறந்த இசையமைப்பாளர் விருது, வாத்தி படத்துக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகு சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் மலையாள நடிகர் விஜயராகவன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. எம்.எஸ்.பாஸ்கருக்கு பார்க்கிங் படத்திற்காகவும், விஜயராகவனுக்கு பூக்காலம் படத்திற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டன. எம்.எஸ்.பாஸ்கர் வேட்டி-சட்டையுடன் மிகவும் எளிமையாக வந்து விருதை பெற்றார்.
இந்த நிகழ்விற்கு பின்பு, டெல்லியிலிருந்து சென்னை வந்த எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருதுடன் கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று, விஜயகாந்த் நினைவிடத்தில் விருதை வைத்து தலை வணங்கி மரியாதை செலுத்தினார். அதன்பின், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு சென்று, அவரது உருவப் படத்திற்கு முன் விருதும் அதனுடன் வழங்கப்பட்ட சான்றிதழையும் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் உடனிருந்தார்.