அமீர்கான் நடித்த சித்தாரே ஜமீன் பர் சமீபத்தில் திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படத்திலும் ஆமிர் கான் கேமியோவில் தோன்றினார். சமீபத்தில் அவர் கூலி குறித்து விமர்சனமாக பேசியதாகக் கூறி ஒரு செய்தித்தாள் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. அந்தக் குறிப்புகள் காட்டுத்தீ போல பரவி செய்தியாக மாறின.

ஆனால், அதுபோன்ற எதையும் ஆமிர் கான் பேசவில்லை என்றும், அந்தச் செய்தித்தாள் போலியானது என்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஆமிர் கான் கூலி குறித்து எந்தப் பேட்டியும் அளிக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த பேட்டி போலியானது. ஆமிர் கான் தனது அனைத்து பணிகளுக்கும் மரியாதையும் மதிப்பும் கொடுப்பவர். இன்னும் அவர் கூலி படத்தைப் பார்த்ததில்லை. படத்தைப் பார்ப்பதற்கு ஆமிர் கான் உடன் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் லோகேஷ் கனகராஜ்க்கு உள்ளது. ஆனால் அது இதுவரை நடைபெறவில்லை. கூலி படத்தின் அபாரமான வெற்றி, அதில் ஈடுபட்ட அனைவரின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.