நடிகர் விக்ரம் பிரபு, அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமான சுஷ்மிதா பட் நடித்திருக்கிறார். மேலும், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ்ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கிராமத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியானதும் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரவின.
திருமணம் தாமதமாகும் ஒரு நபர், அதனால் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் சந்திக்கும் சவால்கள், பிரச்சினைகள ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் வருகிற ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் “எடுடா பாட்டலே” எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை மோகன் ராஜன் எழுதியுள்ளார், அதை இயக்குநர் மிஷ்கின் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.