தண்டகாரண்யம் என்றால் தண்டனைக்குரிய காடு அல்லது தண்டனை பெற்றவர்கள் வாழும் காடு எனப் பொருள். இன்றைய ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார் பகுதிகளைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதி தண்டகாரண்யம் என அழைக்கப்படுகிறது. ராமாயணத்தின் வனவாச காலத்தில் ராமர், சீதை, லட்சுமணன் அங்கு வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்டுப் பகுதியில் நக்சல்களை ஒழிக்க ராணுவம் நடத்தும் சிறப்பு முகாமில் கலையரசன் சேரும் விதம், அங்கே அவர் எதிர்கொள்ளும் தண்டனைகள், கிருஷ்ணகிரி காட்டில் வாழும் அண்ணன் அட்டகத்தி தினேஷ் சந்திக்கும் சிக்கல்கள் என பல அடுக்குகள் கொண்ட கதை இது. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்திற்குப் பின் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப் படம், காடு, அரசு, பழங்குடி மக்கள், மனித உரிமை பிரச்சினைகள், அதிகாரிகள், அரசியல் சுயநலம் ஆகியவற்றை இணைத்து சொல்லப்படுகிறது.

கிருஷ்ணகிரியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த கலையரசன், வனத்துறையில் தற்காலிக ஊழியராக வேலை செய்கிறார். அந்த வேலை நிரந்தரமானால் காதலி வின்சுவை திருமணம் செய்யலாம் என ஆசைப்படுகிறார். ஆனால் காட்டில் கஞ்சா வளர்த்து சட்டவிரோதமாக செயல்படும் முத்துகுமாரை வெளிப்படுத்தியதால் வேலையை இழக்கிறார். தம்பியின் எதிர்காலத்துக்காக நிலத்தை விற்று, அரசு நடத்தும் நக்சல் எதிர்ப்பு படையில் சேர்த்து ஜார்க்கண்ட் அனுப்புகிறார் அண்ணன் அட்டகத்தி தினேஷ். அங்கே தம்பியின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது, அண்ணன் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதே கதையின் மையம்.
வனத்துறை அதிகாரிகளால் ஏமாறும் மனிதராகவும், நக்சல் ஒழிப்பு முகாமில் அடக்குமுறைகளை அனுபவிக்கும் வேடத்தில் வரும் கலையரசனின் நடிப்பு சில இடங்களில் தாக்கம் செலுத்துகிறது. குறிப்பாக முகாமில் படும் பாடு, வேதனை மனதில் நிற்கிறது. ஆனால் சில காட்சிகளில் இன்னும் உணர்ச்சியை வலுவாக வெளிப்படுத்தியிருக்கலாம். காதலியாக வரும் வின்சு எளிமையாக மனதை கவர்கிறார்.
நக்சலாக மாறும் அட்டகத்தி தினேஷ் தனது வசனங்களாலும் நடிப்பாலும் படத்திற்கு எடை சேர்க்கிறார். அவரது அப்பா, மனைவி ரித்விகா மற்றும் பழங்குடி மக்கள் யதார்த்தமாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் வில்லன்களின் கேரக்டர்கள் சினிமா பாணியில் மட்டுமே காட்சியளிக்கின்றன. அதேபோல ஜார்க்கண்ட் முகாம் காட்சிகளில் பல சீன்கள் நீளமாக இருப்பதும், வடஇந்திய ராணுவ அதிகாரிகளை வில்லன்களாக காட்டுவதும் சீரான சமநிலையை குலைக்கிறது.
கலையரசனின் நண்பனாக வரும் டான்சிங் ஷபீர், தனது கதாபாத்திரம், வசனங்கள், நடிப்பால் பல இடங்களில் ஹீரோவை விட மேலோங்கி நிற்கிறார். ஆனால் சில வேறு கதாபாத்திரங்கள் செயற்கையாக தோன்றுகின்றன. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைத்தும் ஒரே மாதிரியாகக் கெட்டவர்களாக காட்டப்படுவது படத்தை ஒருதலைப்பட்சமாக்குகிறது.
பிரதீப் கலைராஜாவின் கேமரா காட்சிகள் காட்டின் இயல்பை தத்ரூபமாகப் பிடித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்துக்கு வலுசேர்க்கின்றன.