இயக்குநர்கள் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் மேனன் இருவரும் அவரவர் தனித்துவமான கதைக்களங்களால் இயக்குனராக மிகுந்த வரவேற்பைப் பெற்றவர்கள். தற்போது, இந்த இருவரும் இயக்கத்தைக் காட்டிலும் நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். சமுத்திரக்கனி, தமிழ் படங்களைத் தாண்டியும், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கவுதம் மேனன் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், அவருக்கும் பிற மொழித் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக, மலையாளத் திரைப்படங்களில் சிலவற்றில் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் ராம் சக்ரீ இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் மேனன் இருவரும் இணைந்து நடித்திருக்கும் புதிய படம் ‘கார்மேனி செல்வம்’. இந்த படம் இவ்வருட தீபாவளி தினத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என, படக்குழு முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இதற்கு முன்னரும் இருவரும் ‘ரத்னம்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.