லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. நாகர்ஜுனா, சத்யராஜ் , உப்பேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருக்கும் கூலி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியிருக்கும் இந்தப் படம், வெற்றிபெற வேண்டும் என்றும் அதேபோல் இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்த் அவரது திரைப்பயணத்தில் 50-வது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்யும் நிலையில் பல்வேறு மொழித் திரையுலகின் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மலையாள திரையலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி தன் எக்ஸ் பக்கத்தில், “திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அன்பு ரஜினிகாந்த்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டதை உண்மையிலேயே ஒரு பெருமிதமாக உணர்கிறேன். உங்களின் கூலி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். எப்போதும் உத்வேகமாகவும் பிரகாசமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
அதேபோல், நடிகர் மோகன்லால் தன் எக்ஸ் பக்கத்தில், “ஐம்பது வருடங்களாக திரையில் மனதை கவரும் இணையற்ற நடிப்பு, அர்ப்பணிப்பு, தன் அற்புதம் மூலம் இந்த மகத்தான மைல்கல்லுக்கான ஒரே ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. அவருக்கு என் வாழ்த்துகள். இன்னும் கூலி போன்ற அடையாளத் திரைப்படங்களும் வரப்போகிறது என வாழ்த்தியிருக்கிறார்.