நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று (ஆகஸ்ட் 14)உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்று அழைக்கப்படும் ‘எல்.சி.யு.’வில் இணையுமா? இணையாதா? என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கணிப்புகளை ரசிகர்கள் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில், இது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“கூலி படம் வெளியாக சில மணிநேரங்களே உள்ள நிலையில், நான் மிகவும் ஆச்சரியமாக உணர்கிறேன். இந்தப் படத்தை முழுமையான படைப்பு சுதந்திரத்துடன் வடிவமைக்கவும், எனது பார்வையை உயிர்ப்பிக்கவும் வாய்ப்பளித்த எனது தலைவர் ரஜினிகாந்த் சாருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பயணத்தை இன்னும் மறக்கமுடியாததாக மாற்றிய நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், மற்றும் அமீர் கான் ஆகியோருக்கு எனது நன்றிகள். பலம் மற்றும் அர்ப்பணிப்பின் தூணாக இருந்த எனது குழுவினருக்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக, எனது தொலைநோக்குப் பார்வையை ஆதரித்து, அவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனைத்து வகையிலும் பங்களித்த ஒவ்வொருவருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்தத் திட்டத்தை என்னிடம் ஒப்படைத்து, அதை முழுமையாக வடிவமைக்க எனக்கு படைப்பாற்றல் சுதந்திரத்தை வழங்கியதற்காக சன் பிக்சர்ஸ் மற்றும் கலாநிதி மாறனுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கண்ணனின் அசைக்க முடியாத ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். முழு குழுவிற்கும் மிக்க நன்றி. நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
எனது அன்பான ரசிகர்களே, இந்த படத்திற்கும் எனக்கும் நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. சில மணிநேரங்களில் கூலி உங்களுடையதாக இருக்கும். உங்களுக்கு ஒரு அற்புதமான திரை அனுபவம் கிடைக்கும் என்று நான் மனதார நம்புகிறேன். மேலும் படத்தின் கதையை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று நான் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கூலி படம் எல்சியு கிடையாது. இப்படம் எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஒரு தனித்துவமான படம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.