பாலிவுட் இயக்குனர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘கில்’ திரைப்படம், கரண் ஜோகர் தயாரிப்பில் லக்ஷயா, ராகவ் ஜுயல், தன்யா, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவான இந்த படம், வெளியானதும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமையை இயக்குனர் ரமேஷ் வர்மா பெற்றுள்ளார். ‘கில்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கதாநாயகனாக துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர். மேலும், வில்லன் வேடத்தில் ‘உறியடி’ விஜயகுமார் நடிக்க உள்ளார்.
இதனுடன், இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவை முறையே கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கேதிகா சர்மா. அசல் ‘கில்’ படத்தில் ஒரு கதாநாயகி மட்டுமே இருந்த நிலையில், ரீமேக்கில் மூன்று கதாநாயகிகளை இணைத்திருப்பதால், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.