பாலிவுட்டில் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகியுள்ள படம் ‘வார்-2’. இந்த படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கதாநாயகனாக நடிக்க, மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். இவர் இந்த படத்தின் மூலம் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க, இப்படத்தை இயக்கியுள்ளார் அயன் முகர்ஜி. இந்த ‘வார்-2’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் ‘கூலி’ படத்துடன் ஒரே நாளில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனருக்குக் கொடுக்கப்பட்ட சம்பள விவரங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது. அதன் படி, ஹிருத்திக் ரோஷனுக்கு 48 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்றும், வில்லனாக நடித்த ஜூனியர் என்டிஆருக்கு அதைவிட அதிகமாக 60 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. கதாநாயகி கியாரா அத்வானிக்கு 15 கோடி மற்றும் இயக்குநர் அயன் முகர்ஜிக்கு 32 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு, இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 250 கோடியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பாலிவுட்டின் முன்னணி ஹீரோவாகிய ஹிருத்திக்கை விட ஹிந்தியில் தற்போதுதான் தனது முதலாவது படத்தில் நடிக்கும் ஜூனியர் என்டிஆருக்குக் கொடுக்கப்பட்ட அதிக சம்பளம் பாலிவுட் திரையுலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களிடமும் இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.