2018ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளியானது. சமூக ஒடுக்குமுறை மற்றும் நியாயமான கேள்விகளை எழுப்பி பாராட்டைப் பெற்ற இப்படம், தமிழில் தனிச்சிறப்புடன் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மாரி செல்வராஜ் அறிமுகமாகி, தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.
இப்போது இந்த படத்தை ஹிந்தியில் ‘தடக் 2’ என்ற தலைப்பில் ரீ மேக் செய்துள்ளார்கள். இப்படத்தின் முதல் பாகமும் சமூக ஒடுக்குமுறையை பேசிய நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பரியேறும் பெருமாள் ரீமேக்காக உருவாக்கியுள்ளனர். ஷாசியா இக்பால் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி டிம்ரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தர்மா புரொடக்சன்ஸ் எனும் கரண் ஜோஹரின் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.