விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் நடித்த ‘96’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரேம் குமார், கார்த்தியுடன் ‘மெய்யழகன்’ திரைப்படத்தை இயக்கி அதிலும் வெற்றியை பதிவு செய்தார். தற்போது ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை அவர் எழுதிப் பூர்த்தி செய்துள்ளார். ஆனால் இன்னும் இத்திரைப்படம் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்தநிலையில், இந்திய திரைக்கதை எழுத்தாளர்கள் விழாவில் கலந்துகொண்ட பிரேம் குமார், “என் அப்பா வட இந்தியாவில் வளர்ந்த தமிழர் என்பதால், எனக்கும் ஹிந்தி மொழியில் திரைப்படம் இயக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதனால்தான் முதலில் ‘96’ திரைப்படத்தை ஹிந்தியில் எடுக்க வேண்டும் என எண்ணினேன். நடிகர் அபிஷேக் பச்சனை ஹீரோவாக நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால், அவர் அப்போது என்னுடன் தொடர்பில் இல்லை.
இன்றும் நேரடியாக ஹிந்தி மொழியில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருக்கிறது. அதேபோல், ’96’ மற்றும் ‘மெய்யழகன்’ போன்ற படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்யும் எண்ணமும் எனக்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.