தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு 2026 ஜனவரி 9-ம் தேதி உலகளவில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு, விஜய் முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளார்.
இது விஜய்யின் கடைசி திரைப்படம் என கூறப்படும் நிலையில், இப்படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். மேலும், நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் (ஜூன் 22) இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, நள்ளிரவு 12 மணிக்கு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் ரோர்’ எனும் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.